Toronto District School Board
Toronto District School Board

Online Code Of Conduct

கணினி வழித் தொடர்பின் ஒழுக்க விதிக்கோவை

ரொறொன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை (TDSB), பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உபயோகத்துக்கென கணினித் தொகுதிகளையும் அவற்றுக்கான மூலவளங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு கணினி அல்லது தொலைத்தொடர்பு வலையமைப்பு வழியாக உபயோகிப்பவர் சென்றடையக் கூடிய தகவல் தரவுகள் யாவும் இக் கணினி மூலவளங்களில் அடங்கும்.

TDSB பாடசாலைச் சபையின் கொள்கைகள், நடைமுறைகள், நடத்தைக் கோவைகள் மற்றும் நியதிகள் யாவும் TDSB பாடசாலைச் சபையினால் அல்லது அதன் சார்பில் வழங்கப்படும் கணினி வழியான தொகுதிகள் மற்றும் மூலவளங்களை உபயோகிக்கின்ற யாவருக்கும் பொருந்தும். "கணினி வழித் தொடர்பின் ஒழுக்க விதிக் கோவை"(Code of Online Conduct) என்பது சபையின் கணினித் தொகுதிகள் மற்றும் அவற்றின் மூலவளங்கள் தொடர்பிலானது ஆகும். இவற்றைப் பயன்படுத்தும் யாவரினதும் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினைக் காப்பாற்றுவதற்காக இந்த விதிக்கோவை தயாரிக்கப்பட்டு உள்ளது.

வழங்கப்படும் கணினி முறையிலான வசதிகள் மற்றும் அவற்றில் அடங்கியுள்ள தகவல் ஆகியவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான TDSB பாடசாலைச் சபை பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இத் தொகுதிகளுக்குள் செல்வோர் அவற்றைப் பயன்படுத்துகின்ற முறையினைக் கண்காணிக்கும் உரிமை TDSB பாடசாலைச் சபைக்கு உள்ளது.

1) சொந்தப் பாதுகாப்பு விதிகள்

  • கணினி வழியாக இணையத்தில் சந்திக்க நேரிடும் அந்நியரிடம் உங்கள் சொந்த அடையாளம் (உ-ம்: உங்கள் பெயர். முகவரி, தொலைபேசி இலக்கம், வயது, உடல் தோற்ற விபரங்கள் அல்லது பாடசாலை) எதனையும் ஒருபோதும் தெரிவிக்க வேண்டாம். அது போலவே இது போன்ற தகவல்களை கணினி வழியாக இணையத்தின் பொது கருத்து மன்றங்களிலும் வெளியிட வேண்டாம். ஏனெனில் அங்கு விடப்படும் தகவலினைப் பார்வையிடும் ஒவ்வொருவரையும் உங்களுக்குத் தெரிந்து இருக்காது.
  • கணினி வழியாக இணையத்தில் இன்னும் ஒருவரைப் பற்றிய சொந்த விபரங்களை ஒரு போதும் வெளியிட வேண்டாம். இதைத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அப்படிச் செய்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை முன்கூட்டியே பெறவேண்டியது அவசியம் என்பதுடன் வெளியிடப்படும் தகவல் தீங்களிக்கும் விடயங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்று உங்களுக்கு தெரிந்து இருப்பதும் அவசியம் ஆகும்.
  • கணினி வழியாக இணையத்திற்குள் செல்வதற்கான உங்களுடைய கடவுச்சொல்லினை (password) அல்லது இன்னுமொருவரின் கடவுச்சொல்லினை ஒருபோதும் வெளியிட வேண்டாம்.
  • உங்களுடைய படம் அல்லது இன்னுமொருவரின் படம் அல்லது ஒரு குழுவினரின் படத்தினை மின்னணு முறை வலையமைப்பின் வழியாக அனுப்புவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட எல்லோரின் தகவலுடன் கூடிய அனுமதியைப் பெறாமல் அனுப்ப வேண்டாம். வயது வராதவர்களின் விடயத்தில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முன் அனுமதி பெறப்படுதல் வேண்டும்
  • இணையத்தில் உங்களுக்கு விடப்படும் ஏதாவது செய்தி அல்லது வேண்டுகோள் உங்களுக்கு மனதில் குழப்பத்தைத் தருகிறது அல்லது உங்களுடன் சொந்த முறையில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்றால் அதுபற்றி உடனடியாக ஓர் ஆசிரியருக்கு அறிவிக்கவும்.  
  • வெளியிடங்களுக்கு வகுப்புடன் கூட்டாகச் செல்லும் சிறு பயணங்கள் தொடர்பான குறித்த திகதிகள், நேரங்கள் மற்றும் இடங்கள் பற்றி, அத்தகவலைப் பெறுவதற்கு நேரடியான தகைமை இல்லாதவர்களுக்கு அல்லது இணையத்தின் கருத்து மன்றங்களில் வெளியிட வேண்டாம். இவ்வாறான மன்றங்களில் அத்தகவலினை முன்பின் தெரியாதவர்களும் பார்வையிட முடியும்

 

2) ஏற்றுக் கொள்ள முடியாத இணையத் தளங்கள் மற்றும் விடயப் பொருட்கள்

இணையம் போன்ற உலகளாவிய ஒரு வலையமைப்பில் விடப்படும் தகவலின் உள்ளடக்கத்தைச் செயல்திறன் மிகுந்த ஒரு முறையில் கட்டுப்படுத்துவது ஓர் இயலாத காரியம். சிலசமயங்களில் கணினிவழியான இணையத் தொகுதிகளைப் பயன்படுத்துவோர் இணையத்தில் விவாதத்துக்குரிய பொருத்தமற்ற விடயப் பொருட்களையும் காண்பதற்கு நேரிடலாம். இவற்றை வேறு பயனாளிகள் , பெற்றோர் அல்லது கல்விச் சபைப் பணியாளர்கள் பொருத்தமற்றது அல்லது வெறுப்பூட்டுவது என்று கருதக்கூடும். இம்மாதிரியான விடயப் பொருட்களை சுயவிருப்பத்தில் அணுகுவதைத் தவிர்ப்பது கணினியைப் பயன்படுத்தும் தனிநபரின் பொறுப்பாக இருக்கிறது. தற்செயலாக அவ்வாறான விடயப்பொருளிளைக் கணினியில் காண நேரிட்டால் அதுபற்றி உடனடியாக ஓர் ஆசிரியரிடம் அல்லது பொருத்தமான நிர்வாகியிடம் தெரிவிக்கவேண்டும் .

தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான கனேடிய பட்டய வரைவு மற்றும் ஒன்ராறியோ மனித உரிமைகள் விதிக் கோவை ஆகியவற்றின் கீழ் ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளையும் மதிக்கின்ற, பாதுகாப்பான பாடசாலைகளையும் வேலைத் தலங்களையும் வழங்கவேண்டிய கடப்பாடு ரொறொன்ரோ மாவட்ட கல்விச் சபைக்கு உள்ளது. இதனை நிறைவேற்றுவதில் இக் கல்விச் சபை மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இங்கு பாகுபாடு  காட்டுதல் மற்றும் தொந்தரவு கொடுத்தல் ஆகியன பொறுத்துக் கொள்ளப் படுவதில்லை. பாகுபாடு காட்டுகின்ற அல்லது தொந்தரவு கொடுக்கின்ற வகையான தகவல் பொருள் அடங்கியிருக்கும் இணையத் தளங்களை சுயமாகத் தெரிந்து கொண்டு அணுகுவதற்கு சபையின் கணினி வழி இணையத் தொகுதிகளைப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

TDSB கல்விச் சபையின் கணினி வழியான இணையத் தொகுதிகளை பயன்படுத்துவோர் பின்வரும் இயல்புகள் கொண்ட எவ்வித தகவலினையும் அதுபற்றித் தெரிந்து கொண்டு அணுகவோ, புதிதாகச் சேர்க்கவோ, கீழிறக்கவோ, வெளிக்காட்டவோ, விநியோகிக்கவோ அல்லது பிரசுரிக்கவோ கூடாது:

  • சட்ட விரோதமானது அல்லது சட்டவிரோதமான செயல்களைச் செய்யத் தூண்டுவது அல்லது சட்ட விரோத செயற்பாட்டிற்கு வசதியளிப்பது;
  • யாரோ ஒருவரை அச்சுறுத்துவது அல்லது பயம் கொள்ளச் செய்வது அல்லது பிறருக்கு எதிராக வன்முறை, வெறுப்பு அல்லது பாகுபாடு காட்டவேண்டும் என்று உணர்த்துவது;
  • தகாத வகையான அத்துடன்/அல்லது இழிவுபடுத்தும் மொழி அல்லது நடத்தையினை பயன்படுத்துவது;
  • தகாத முறையில் மதம் அல்லது அரசியல் சார்ந்த செய்திகள் அடங்கி இருப்பது;
  • ரொறொன்ரோ மாவட்ட பாடசாலைச் சபையின் கொள்கைகள், கல்வி அமைச்சின் கொள்கைகள், ஒன்ராறியோ மனித உரிமை விதிக்கோவை அல்லது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான கனேடிய பட்டய வரைவு ஆகியவற்றின் பிரகாரம் அமைந்துள்ள வேறொரு மனிதரின் உரிமைகளை மீறுவது அல்லது மிதிப்பது;
  • இனம், கலாச்சாரம் அல்லது சமய ரீதியில் வெறுப்பூட்டுவது;
  • கட்டுப்படுத்தப்பட்டு உள்ள வஸ்துக்களின் உபயோகத்தை அல்லது சட்டவிரோதமான செயலொன்றில் பங்கு பற்றுவதை ஊக்குவிப்பது அல்லது இணையத்தினைப் பயன்படுத்தி குற்றவியல் முறையிலான செயல்களுக்கு மற்றவர்களைத் தூண்டுவது;
  •  நற்பெயரைக் கெடுக்கின்ற, இழிவு படுத்துகின்ற ஆபாச மொழியிலான பாலுணர்வை தூண்டுகின்ற அல்லது பாலியல் விபரத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ளது;
  • தனிநபர்கள் சம்பந்தமாக தகவலுடன் கூடிய முன்அனுமதி இல்லாமல் அவர்களின் சொந்த தகவல், உருவங்கள் அல்லது கையொப்பங்கள் வெளியிடப்பட்டு உள்ளது;
  • பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்கின்ற அல்லது தகாத முறையில் காதல் தொனிக்கின்ற செய்திகள் அடங்கியது;
  • பொருத்தமான அனுமதியின்றி ஏதாவது ஒரு வியாபார நிறுவனம் அல்லது வர்த்தக அமைப்பின் சார்பாக பயனாளிகளைத் தேடும் இயல்புடையது;
  • பாரிய அளவுக் கடித முறை (bulk mail), கூளக் கடித முறை (junk mail) அல்லது "வேண்டா மின்னஞ்சல் செய்திமுறை" (spamming) ஆகியவற்றை ஆதரிக்கும் தன்மை கொண்டது;
  • சங்கிலித் தொடர் கடிதங்கள் அல்லது மின்னஞ்சல் குப்பையினைப் பரப்புவது;
  • அனுப்புகிறவரின் அடையாளத்தை மறைக்கவோ, ஆள்மாறாட்டம் செய்யவோ அல்லது தவறாக வெளிப்படுத்தவோ முற்படுவது


3)
கணினிவழி இணைய உபயோகத்துக்கான வழிகாட்டுதல்கள்

 TDSB கல்விச் சபையின் கணினிவழி இணையத் தொகுதிகளைப் பயன்படுத்தும் எல்லோரும் பின்வருவனவற்றைச் செய்கின்றனர்:

  • கணினிவழி இணையச் சேவையை உபயோகிக்கும் நேரம், அச்சேவைத் தொகுதியின் வழியாக அனுப்பப்படும் தகவலின் கனஅளவு ஆகியவற்றை நியாயமான அளவு மட்டங்களுக்கு உட்பட வைத்திருத்தல். கணினிவழி இணையத் தொகுதியினை அளவுக்கு மீறி உபயோகிக்கும் பொழுது (உ-ம்: பெரிய ஆவணங்களை பாரிய அளவுக் கடிதங்களாக அனுப்புதல் அல்லது சேவைத் தொகுதியின் உபயோகம் உச்சக் கட்டத்தில் இருக்கும் நேரங்களில் பெரிய கோவைகளை இடமாற்றம் செய்தல்) எல்லோருக்குமான சேவைகளை அது குழப்பலாம்.
  • கணினி வழியான இணையத் தொகுதிக்கு அல்லது அத்தொகுதியில் அடங்கியுள்ள தகவலுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமானால், அதனை உரிய நிர்வாகியிடம் அறிவித்தல். அத்தீங்கு தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்ற செய்கையினாலேயோ ஏற்பட்டிருந்த போதிலும் தீங்கு பற்றி அறிவித்தல்

4) தடை செய்யப்பட்டுள்ள உபயோகங்கள் மற்றும் செயற்பாடுகள்

TDSB கல்விச் சபையின் கணினிவழி இணையத் தொகுதிகளைப் பயன்படுத்துவோர் எல்லோரும் பின்வருவனவற்றைச் செய்யாது கவனமாகச் செயல்படுகின்றனர்:

  • கணினி வைரசுக்கள் அல்லது வேறு தகாத அல்லது அங்கீகாரம் பெறாத கணினி உபயோத்துக்கான பொருட்களை பிரதியாக்கம் செய்தல், தரவிறக்கம் செய்தல், நிறுவுதல் அல்லது இயக்குதல், உதாரணம்: விளையாட்டுகள், கோவைகள், எழுத்துப் பிரதிகள், எழுத்துருக்கள் அல்லது ஏதோ ஒரு மூலவளத்தில் இருந்து பெற்ற இயங்குநிலை இணைப்புத் தகவல் அகங்கள்(dynamic link libraries /DLL's).
  • கணினிகளுக்கு அத்துடன்/அல்லது உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தல். உதாரணம்: கணினியின் வன்பொருள், தளபாடம், பட ஒளிவீச்சுக் கருவி, இணைப்புக்கள், தட்டச்சுப் பலகைகள், சேமிப்புச் சாதனங்கள் (உ-ம்: வட்டு இயக்கிகள்) மற்றும் சுட்டுச் சாதனங்கள் (உ-ம்: சுண்டெலிச் சுட்டு) ஆகியனவும் இவை போன்ற பிறவும்.
  • யாருக்காவது சொந்தமான கோப்புகள் அல்லது தரவினை அவரது அனுமதியின்றி சேதப்படுத்தல் அல்லது துடைத்தழித்தல்.
  • வேறொருவருடைய கணினிவழி இணையக் கணக்கினை இணையத் தொகுதியில் பயன்படுத்தல்.
  • வேறொருவர் கணினிவழி இணையத் தொகுதியினை அணுகிப் புகமுடியாமல் செய்தல். உதாரணமாக: இணையக் கணக்குகளை செயலிழக்கச் செய்தல் அல்லது உரிய அதிகாரம் இல்லாமல் கடவுச் சொற்களை மாற்றுதல்.
  • தகுந்த அதிகாரம் இல்லாமல் கணினியின் கவசத்தை விலக்குதல், கணினியை நகர்த்துதல், கணினிக்கான வடங்களை அல்லது இணைப்புகளை மாற்றுதல்.
  • அங்கீகரிக்கப்படாத சாதனங்களை ஒரு கணினியுடன் அல்லது கணினி வலையமைப்புடன் இணைத்தல். உதாரணம்: எடுத்துச் செல்லும் கணினிகள், வட்டு இயக்கிகள், வரைமுறைப் பகுப்பாய்வுக் கருவிகள்(protocol analyzers) மற்றும் வேறு மின்னணுமுறை அல்லது பொறிமுறையிலான சாதனங்களும் இவை போன்ற பிறவும். தகுந்த அதிகாரத்தைப் பெறாமல் ஏதாவது ஒரு கணினி, சேவையகம் அல்லது பிறசாதனத்தைச் சேர்ந்த தொகுதிக் கோப்புகள் அல்லது ஏற்பாட்டு நிலைகளை இடமாற்றம் செய்தல், பிரதியெடுத்தல் அல்லது திரிபு படுத்தல்.
  • மற்றவர்களுக்குச் சொந்தமான தகவல், ஆக்கம் அல்லது மென்பொருளை அதிகாரம் பெறாமல் பிரதியெடுத்தல், கணினிகளை அல்லது வலையமைப்பினை துர்ப்பிரயோகம் செய்யும்படி மற்றவர்களைத் தூண்டுதல், தகாத இணையப் பொருட்களை வெளிக்காட்டுதல், இடமாற்றம் செய்தல் அல்லது பகிர்ந்து கொள்ளல் போன்ற செய்கைகளால் தம்மையோ அல்லது மற்றவர்களையோ தரம் கெடச் செய்தல்; மென்பொருளைத் திருடுதல் அல்லது அதிகாரம் பெறாமல் மற்றவர்களுக்குச் சொந்தமான ஆக்கங்களைப் பிரதியெடுத்தல் திருட்டு என்றுதான் கருதப்படுகிறது.
  • ·TDSB கல்விச் சபைக்குச் சொந்தமான கோப்புகள், நிரல்கள் அல்லது வேறு ஏதும் தகவலினை எந்த ஒரு காரணத்துக்கு என்றாலும் பிரதியெடுத்தல், இடமாற்றம் செய்தல் அல்லது பயன்படுத்தல்; இவ்வாறான செயல்களுக்கு குறிப்பிட்டு எதனையும் செய்வதற்கு அனுமதிக்கும் அனுமதிப் பத்திரம் இருந்தாலன்றி இவை தடை செய்யப்பட்டு உள்ளன.
  • பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறுதல், குறும்புமுறைப் பிரவேசம் (hacking), அதிகாரம் இல்லாமல் பதிவுகளை அணுகிப் படித்தல் அல்லது வேறு ஏதாவது ஒரு குழப்ப நடவடிக்கையினால் TDSB கணினி வலையமைப்பின் செயற்பாட்டினை நிலைகுலையச் செய்வதற்கு முயற்சித்தல்.
  • மற்றவர்களுடைய கருத்துக்கள், எழுத்தாக்கங்கள் அல்லது உருவங்களை எடுத்து அவற்றை உங்களுடையன போல முன்வைத்தல்; பதிப்புரிமைச் சட்டங்களின் கீழ் தகவல் தரவுகள் யாவற்றுக்கும் அவற்றை ஆக்கியவர்/ஆசிரியர்(கள்) சொத்துரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்; எனவே அவற்றைப் பயன்படுத்துவதற்கு அவர்களின் அனுமதி தேவைப்படுகிறது. பதிப்புரிமையின் கீழ் உள்ள ஆக்கப் பொருட்களை அனுமதியின்றி உபயோகித்தால் அதற்காகச் சட்டரீதியான வழக்கு தொடரப்படலாம்

5) பின்விளைவுகள்

மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கல்விச் சபையின் கணினி வழியான இணையத் தொகுதியினை தகாத முறையில் பயன்படுத்த முற்பட்டால் ஒழுங்கு முறை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடலாம் . சட்டமுறையிலான நடவடிக்கை அத்துடன் /அல்லது காவல் துறையினரின் தலையீடு அதில் அடங்கி இருக்கலாம்.


6) கணினி வழி இணையத்தில் பிரசுரித்தல்

இணையத்தில் அல்லது அகவிணையத்தில் (Intranet) பிரசுரிக்கப்படும் தகவல் பல மில்லியன் கணக்கிலான மக்களைச் சென்றடைகிறது. பிரசுரிப்போர் இவர்களைப் பெரும்பாலும் முன்பே அறிந்திருக்க மாட்டார்கள் . இக்காரணத்தினால் ரொறொன்ரோ மாவட்ட பாடசாலைச் சபையின் கணினி வழி இணையத் தொகுதியில் பிரசுரிக்கப்படும் தகவலினை ஒழுங்குவிதிக்கு உட்படுத்துவது (regulate) முக்கியமாக உள்ளது.

  • TDSB கல்விச் சபையின் சகல கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமையவே, அச்சபையின் வசதிகளைப் பயன்படுத்தி தகவலானது மின்னணு முறையில் பிரசுரம்  செய்யப்படுகிறது.
  • ரொறொன்ரோ கல்விச் சபையின் இணையத் தளத்தில் இருந்து வெளியே உள்ள தளங்களுக்கு ஏற்படுத்தப்படும் இணைப்புகள் மிகவும் கவனமாகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். இத்தளங்களும் TDSB கல்விச் சபைத் தளத்தைப் போன்று அதேமாதிரியான உயர்ந்த உள்ளடக்கத் தர நியமங்களைப் பின்பற்ற வேண்டும்.
  • ஒரு தொகுப்பாக எத்தகவலினையும் இணையத்தில் பிரசுரிக்கும் பொழுது (உ-ம்: வலையத்தளம்), அதனைப் பிரசுரிப்பவருடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஓர் ஏற்பாடு அத்தொகுப்பின் ஆரம்பத்தில் கணினித் திரையில் தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
  • கணினி வழியாக இணையத்தில் பிரசுரிக்கப்படும் தகவல் எப்பொழுதும் புதுப்பிக்கப்பட்டு திருத்தமானதாக இருக்க வேண்டும். வாசிப்பவரை அவை பிழையான வழியில் எண்ணுவதற்கு இட்டுச் செல்லக் கூடாது .
  • TDSB கல்விச் சபையின் நடைமுறைகளுக்கு அமைவாகத் தகவலின் அடிப்படையில் தனிநபர்கள் வெளிப்படுத்திய அனுமதி இல்லாமல், அவர்களின் சொந்த முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், தனியாக அல்லது குழுவாக எடுத்த படங்கள் அல்லது கையெழுத்துக்கள் போன்ற சொந்த விடயங்களைப் பிரசுரிக்கக் கூடாது.
  • எமது மாணவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளோ பணிப்பிரிவுகளோ எதிர்வரும் களஆய்வுப் பயணங்கள்(field trips) சம்பந்தமாக குறிக்கப்பட்ட திகதிகள், நேரங்கள், இடங்கள் ஆகியன பற்றி இணையத்தில் பிரசுரிக்கக் கூடாது.
  • இணையத்தில் பிரசுரிக்கப்படும் ஆக்கங்கள் யாவும் மூல ஆக்கங்கள் எனவும், அல்லது ஆக்கம் செய்தவரிடம் இருந்து பதிப்புரிமை தொடர்பாக அனுமதி பெறப்பட்டு விட்டது என்றும், ஆக்கத்தின் பதிப்புரிமை யாருடையது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும் உறுதி செய்யும் பொறுப்பு சம்பந்தப்பட்ட பாடசாலை அல்லது திணைக்கள நிர்வாகியின் பொறுப்பாகும்.
  • TDSB கல்விச்சபையின் மின்னணு முறைப் பிரசுரம் எதிலாயினும் விளம்பரம் செய்வதற்கான அங்கீகாரம் அதற்கு மேற்பார்வையாளராக உள்ள அதிகாரியிடம் இருந்து பெறப்படுதல் வேண்டும்.
  • இணையத்தில் வெளியிடப்படும் வலையப் பக்கங்கள் யாவும் ரொறொன்ரோ மாவட்ட கல்விச் சபையின் உத்தியோகபூர்வ மத்திய இணையத் தளத்துடன் இணைக்கப் பட்டு இருத்தல் வேண்டும்.
  • TDSB கல்விச் சபை பங்குபற்றும் வர்த்தக தளம் எதிலும் வெளியீடு செய்யப்படும் வலையப் பக்கங்கள் அல்லது சபையினால் உரிய கட்டணம் செலுத்தப்பட்ட வலையப் பக்கங்கள் TDSB கல்விச் சபையின் சொத்தாகக் கருதப்படும்


7)
சட்டமுறைக் கடப்பாடு

ரொறொன்ரோ மாவட்ட கல்விச் சபையானது தனது கணினிவழியான இணையச் சேவைகள் அல்லது இணைய மூலவளங்கள் சம்பந்தமாக, இச்சேவைகளைத் தொடர்ந்து இயக்குதல் பற்றியோ, உபயோகிக்கப்படும் உபகரணங்கள், வசதிகள் அவற்றின் தொழில் திறன் பற்றியோ, அல்லது TDSB கல்விச் சபையின் இணையத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தேவைக்காக இடப்பட்டு உள்ள எந்த ஒரு நிரல் அல்லது கோப்பின் பொருத்தம், இயக்க நிலை மற்றும் பாதுகாப்பு பற்றியோ, எந்த இயல்பு அல்லது வகையான உத்தரவாதத்தையும், வெளிப்படையாகவோ  அல்லது அனுமான முறையிலோ, வழங்கவில்லை.

 

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL